நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரி நடிகர் விஜய்யின் உண்மையான பெயரில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே தனது தனித்துவமான குணாதிசயம், போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு அசத்தி வருபவர் நடிகர் ஆரி. இம்முறை டைட்டிலை வெல்ல தகுதியான போட்டியாளராகவும் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறார். இவரின் பகவான் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் வீட்டில் வெளியிடப்பட்டு சக போட்டியாளர்களின் பாராட்டைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து அவர் நடித்த ‘அலேகா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எஸ்.எஸ். ராஜமித்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆரிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் போலீஸ் ஆரியை லத்தியால் அடித்து அவரது பெயரைச் சொல்லுமாறு கேட்கின்றனர். அப்போது வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட விஜய் என்று கூறும் ஆரியை உண்மையான பெயரைச் சொல்லும்படி மீண்டும் போலீஸ் கேட்க, ஜோசப் விஜய் என்று ஆரி கூறுகிறார். இதன் மூலம் விஜய்யின் உண்மையான பெயரில் ஆரி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
அலேகா படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆரி ரசிகர்களிடமும் இந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடிகராக வலம் வரும் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். எனவே இனி அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.